சென்னை ஒன் செயலியில் ரூ.1 டிக்கெட் ஆஃபர்; பேருந்து, மெட்ரோ, ரயிலில் பயணிக்கலாம்

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுப் போக்குவரத்து பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (Chennai Unified Metropolitan Transport Authority) அறிமுகப்படுத்தியுள்ள ‘சென்னை ஒன்’ செயலியில் புதிய ரூ.1 டிக்கெட் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்க ஒருங்கிணைந்த டிக்கெட் வசதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரூ.1,000 மதிப்பிலான சில்வர் பாஸ் மற்றும் ரூ.2,000 மதிப்பிலான கோல்டு பாஸ் ஆகிய மாதாந்திர பயண அட்டைகளையும் ஆன்லைனில் பெறும் வசதி உள்ளது.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சலுகையின் கீழ், பயணிகள் ‘சென்னை ஒன்’ செயலியில் தங்கள் பயணத்தை தேர்வு செய்து, கட்டணம் செலுத்தும் பகுதியில் “Rs 1 Ticket Offer” என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் CUMTA-வின் UPI கட்டண முறையை பயன்படுத்தி வெறும் ரூ.1 மட்டும் செலுத்தினால், பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் ரயிலில் ஒருமுறை பயணம் மேற்கொள்ளலாம்.
மேலும், இந்த ரூ.1 டிக்கெட் சலுகையை பயன்படுத்திய பிறகு, அதே UPI முறையின் மூலம் வாங்கப்படும் அடுத்த 6 டிக்கெட்டுகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.
இந்த புதிய திட்டம் பொதுப் போக்குவரத்தை அதிகளவில் பயன்படுத்த மக்களை ஊக்குவிக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
