கணவர் கொடுத்த பொய் புகாரால் மனைவியின் செல்போன் எண் முடக்கம்

குடும்பத் தகராறு காரணமாக கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவியின் செல்போன் எண் முடக்கப்பட்ட விவகாரத்தில், லக்னோ சைபர் பிரிவு போலீசாருக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனது செல்போன் எண் சட்டவிரோதமாக முடக்கப்பட்டதாகவும், அதை மீண்டும் வழங்க உத்தரவிடுமாறும் பெண் ஒருவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் ஜே.ஜே. முனீர் மற்றும் தருண் சக்சேனா அமர்வு விசாரித்தது.
வழக்கில் லக்னோ சைபர் பிரிவு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை ஆய்வு செய்த நீதிபதிகள், தேசிய இணைய குற்றப் புகார் இணையதளம் மூலம் பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தரவுகளை முடக்கும் போது ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினர்.
மேலும், செல்போன் எண் நீண்ட காலமாக முடக்கப்பட்டதால் அது வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் மனுதாரர் மீண்டும் அந்த எண்ணை பெறுவதற்காக தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து சைபர் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த சம்பவம், இணைய குற்றப் புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
