விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில், ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசனம் செய்தனர். இன்று காலை 6.30 மணியிலிருந்து பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு வனத்துறை அனுமதி வழங்கியது. இன்று காலையும் ஏராளமான பக்தர்கள் மலைக் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். நாளை ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு காலை 6 மணியில் இருந்தே, பக்தர்கள் மலைக் கோவிலுக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். காலை 6 மணி முதல், மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவதால், அதிகாலையிலேயே வனத்துறை முகப்பு வாயிலில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். ஞாயிறு கிழமையன்று விடுமுறை நாளாக இருப்பதால், அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சிறப்பாக செய்துள்ளது.

