ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளை போன்று தமிழகத்திலும் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹெல்த் வாக் நடைபாதை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோவை பந்தய சாலையில் உள்ள செயற்கை நீரூற்றில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நடை பயிற்சியினை மேற்கொண்டார். அவருடன் மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்ட அதிகாரிகள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தின் சுகாதார கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முதல்வர் வேகமாக செயல்பட்டு வருவதாகவும், 38 வருவாய் மாவட்டங்களில் எட்டு கிலோமீட்டர் நடை பாதை அமைக்கப்பட்டு மரம், இருக்கை போன்றவற்றை அமைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
மேலும் ஜப்பான், டோக்கியோ ஆகிய நாடுகளில் 8 கிலோமீட்டர் தூரம் ஹெல்த் வாக் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் செந்தில் பாலாஜி ரெகுலர் ரூமிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறினார்.