மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பேருந்து நிறுத்தத்தில் முறையாக பேருந்துகள் நின்று செல்லாததால் அவதிப்படுவதாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு அரசு தொடக்கப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தனித்தனியாக உள்ளது. மேலும் அருகில் உள்ள சோழவந்தான், குருவித்துறை போன்ற பகுதிகளிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இங்கிருந்து மதுரை மற்றும் வெளியிடங்களுக்கு பணி நிமித்தமாக ஏராளமானோர் அரசு பேருந்தை நம்பியே உள்ளார்கள்.
இந்நிலையில், மதுரை மற்றும் சோழவந்தான் அரசு போக்குவரத்து பனிமனையிலிருந்து முள்ளிபள்ளத்தை அடுத்த குருவித்துறை, மன்னாடிமங்கலம், விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகின்றன. இந்தப் பேருந்துகள் முள்ளிப்பள்ளத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவியர் கல்லூரிகளுக்கு செல்பவர்கள் வர்த்தகம் மற்றும் பணி நிமித்தமாக செல்லும் பொதுமக்கள் ஆகியோர் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தனர்.
மேலும் நெரிசலை தவிர்க்க கூடுதல் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இதன் முலம் மாணவர்கள் படியில் தொங்கி செல்வதை தவிர்க்கலாம் என்றும் மாணவர்களை உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களில் இருந்து காப்பாற்றலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.