மதுரையில் அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நடைபெற்ற மாநில உழவர் தினவிழா-2022-ல் தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றார்கள்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பேசியபோது, வேளாண்மை-உழவர் நலத்துறை விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருவதாகவும், அரசு வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 782 புதிய பயிர் வகைகளையும் குறுகிய காலத்தில் அறுவடை செய்யும் வகையில் சத்தான அரசி வகைகளையும் 152 பண்ணைக் கருவிகளையும், 1500 வேளாண் தொழில் நுட்பங்களையும் கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
92 இலட்சம் விவசாயிகள் 32 ஹெக்டேர் நிலப்பரப்பில் நெற்பயிர்களை பயிரிட்டு விவசாய தொழில் செய்கின்றனர். வேளாண்மையை ஊக்குவிக்கின்ற திட்டமான நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் வேளாண்மைக் கல்லூரிகளில் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், வேளாண்மை சார்ந்த பட்டப்படிப்பு பயில இளைஞர்கள் அதிகளவில் விரும்புகின்றனர் என்றும், தமிழ் வழியில் வேளாண்மை பட்டப்படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது என்றும் பேசினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்து வருடத்திற்கு 6 ஆயிரம் மாணவர்கள் வேளாண்மை கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறுதானிய உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய் பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மக்களிடையே கம்பு கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானிய உணவு வகைகள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சிறுதானிய உணவு வகைகளை நியாய விலைக்கடைகளில் மக்கள் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் பேசினார்.
விவசாயப் பெருமக்கள் தாங்கள் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்களை தாங்களே மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக இலாபத்தை பெற முடியும். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர், விவசாய பெருமக்களின் நலனை கருத்திற்கொண்டு உழவர் சந்தையினை ஏற்படுத்தினார்கள். எனவே, வழியில் தமிழ்நாடு முதலமைச்சர், விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் உற்பத்தி பொருட்களை தாங்களே மதிப்புக்கூட்டி விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார் என, வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் , தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:- மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரி 57 ஆண்டுகளை கடந்து செயல்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் , மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரியை பல்கலைக்கழகமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என, சட்டமன்ற தேர்தலின் போது அறிவித்தார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் உணவு என கருதப்பட்ட கம்பு, கேழ்வரகு போன்ற உணவு வகைகள், தற்பொழுது பணக்காரர்களும் விரும்பி உண்ணும் உணவாக உள்ளது. விவசாய பெருமக்கள் அறுவடை செய்கின்ற நெல்லை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கூட்டுறவுத்துறை வேளாண்மை விற்பனை வாரியம் வாயிலாக பெற்றுக்கொள்வதற்கு அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்மை செழித்தால்தான் நாடு செழிக்கும். உழவர் பெருமக்களை முன்னிருத்திதான் நம்நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிக் காலம் தமிழக விவசாய பெருமக்களின் பொற்காலமாக உள்ளது என்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தெரிவித்தார்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், வேளாண் பணிகளில் சிறப்பாக செயல்பட்ட 7 விவசாயிகளுக்கு வேளாண் செம்மல் விருது, 10 விவசாயிகளுக்கு நீர்வள நிலவள திட்டம் முற்போக்கு சாதனை சான்று, 9 விவசாயிகளுக்கு கார்பன் வணிக ஊக்கத்தொகை விருது ஆகியவற்றை வழங்கினார்.