மதுரை செப்டம்பர் 11.நாகமலைபுதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்து கொண்ட பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவில் பாப்பாக்குடி பொதும்பு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி 19. இவர் பிளஸ் டூ படித்து வந்தார். சம்பவத்தன்று பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை மாயமாகிவிட்டார். இந்த சம்பவம் குறித்து அவருடைய பெற்றோர் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இவர் மாயமானதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்திய போது அவர் நாகபாண்டி என்பவருடன் திண்டுக்கல்லில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. பின்னர் அவரை ஆலம்பட்டியில் உள்ள அத்தை கணேசன் மனைவி நாகலட்சுமி வீட்டில் விட்டுவிட்டு நாக பாண்டி சென்றுள்ளார். இந்த நிலையில் அவரை அழைத்துச் செல்ல நாக பாண்டி வரவில்லை என்று மன உளைச்சலில் இருந்த மாணவி அங்காள ஈஸ்வரி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து அத்தை நாகலட்சுமி நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி அங்காள ஈஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.