பழங்குடியின சமுதாய மக்கள் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த ஆரணி நகரில் 1,000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் இருளர் இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் பழங்குடியினத்திற்கான சாதிச் சான்றிதழ் கேட்டு நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வனப்பகுதியில் உள்ள நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும், வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு மற்றும் பயிர் இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் சொந்த வீடு இல்லாத பழங்குடி இன மக்களுக்கு அரசு வீடு கட்டி தர வேண்டும் என்றும், தச்சூர் கிராமத்தில் பழங்குடியின, இருளர் இன மக்களுக்கு அரசு வழங்கிய தொகுப்பு விடுகளை விரைந்து முடித்து தரவேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினர்.
ஆரணி கோட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடியின மக்களுக்கும் நிலுவையில் உள்ள இனச் சான்று, குடியிருப்பு பட்டா வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆரணி கோட்டை மைதானத்தின் வழியாக ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்களை அடித்து நடனமாடி ஊர்வலமாக வந்து ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.