போலீசார் இரவு உணவுக்காக ஓட்டலில் வாகனத்தை நிறுத்திய போது அதில் இருந்த சாராய வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பியோடிய நிலையில் போலீசார் 10 மணி நேரம் போராடி கைது செய்த சம்பவம் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் வன்னியர் வீதி கிராமத்தைச் சேர்ந்த சூர்யா மீது கள்ளச்சாராய வழக்குகள் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் கள்ளச்சாராயம் விற்பனை குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் மதுவிலக்கு போலீசார், நேற்று இரவு சூர்யாவை பிடித்து குடியாத்தம் கிளை சிறைக்கு வாகனத்தில் அழைத்து சென்றனர். அப்போது சூர்யா தனக்கு பசிக்கிறது என்று கூறியதால் ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். உணவு அருந்திய சூர்யா, போலீசார் கண்களில் மண்ணை தூவி அங்கிருந்து தப்பியோடினார்.
இதைத்தொடர்ந்து குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டனர். சுமார் 10 மணிநேர தேடுதல் வேட்டைக்குப் பின் சூர்யாவை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.