மதுரையில் பணியின்போது சிறப்பு சார்பு ஆய்வாளர் மரணம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளிக்கான புத்தாடைகள் வாங்குவதற்கும், வீட்டுக்கு உபயோக பொருட்கள் வாங்குவதற்கும் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், மதுரை மாநகரில் உள்ள நான்கு மாசி வீதிகளிலும் பொது மக்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் வருகின்றனர். இந்த நிலையில், மதுரை கிரைம் பிராஞ்ச் காவல் குடியிருப்பில் வசித்து வரும் பெருமாள். வயது 52. திடீர் நகர் காவல் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இன்று மேலமாசி வீதி அருகே உள்ள மதனகோபால சுவாமி கோயில் அருகே பணிகள் இருந்த பொழுது மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு சக காவலர்கள் அழைத்துச் சென்று பரிசோதனை செய்த பொழுது சிறப்பு சார்பு ஆய்வாளர் பெருமாள் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, உயிரிழந்த காவல் அதிகாரியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணியில் இருந்த காவல் அதிகாரி இறந்த நிகழ்வு மதுரை காவல் துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.