சென்னை நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாயில் மதிப்பீட்டில் நிதிநுட்ப நகரம், 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிதிநுட்ப கோபுரம் கட்டும் பணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், நிதிநுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நிதிநுட்ப துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக தமிழ்நாட்டினை உருவாக்க வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயரிய நோக்கமாகும்.
அதை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நந்தம்பாக்கத்தில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நிதிநுட்ப நகரத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நகரத்தில் பணிபுரிபவர்களுக்கு குடியிருப்பு வசதி, வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்கள் போன்ற வசதிகளை கொண்டிருக்கும். இந்நகரம் அமைவதன் மூலம் 12,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன், சுமார் 80,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.
இதன் ஒரு பகுதியாக, 254 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சர்வதேச தரத்திலான ஒரு நிதிநுட்ப கோபுரத்திற்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம், 1000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்படுவதுடன் சுமார் 7000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திட வழிவகை ஏற்படும்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், டி.ஆர்.பி.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.