விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று கூறியபிறகும், நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்து கொண்டது கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜகவுக்கு தெரிந்த ஒரே வழி, தன்வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பழிவாங்குவதுதான் என ஏற்கனவே சொல்லி இருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள். நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ள முதலமைச்சர், இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும் என்றும், 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துள்ளார்.