அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை பொய் வழக்குப் பதிந்து சிறைபிடித்துள்ளதாக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப் பெருந்தகை அவர் மீது பொய் வழக்குப் பதிந்து சிறைப்பிடித்துள்ளதாக தெரிவித்தார். பாஜக ஆளாத மாநிலங்களில் விசாரணை அமைப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.
மற்ற மாநிலங்களில் கைவரிசையை காட்டிவிட்டு தற்போது தமிழகத்தில் கால்பதித்துள்ளதாக குற்றம்சாட்டிய செல்வப் பெருந்தகை, தோழமை கட்சிகளை மிரட்டுவது அல்லது அவர்கள் மீது வழக்குப்போடுவது போன்ற சம்பவங்கள் மகாராஷ்டிரா, பீகாரில் அரங்கேறி உள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதற்கிடையே கோவை அரசு மருத்துவமனையில் செல்வப் பெருந்தகை, அம்மன் கே அர்ஜுனன், எம்எல்ஏ சரஸ்வதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் அறையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த செல்வப் பெருந்தகை, MRI கருவி வழங்கப்பட்ட 90 நாட்களில் அவற்றை பொருத்த வில்லை என CAG ஒரு பரிந்துரை அறிக்கையை வழங்கியிருந்தது. அதன் அடிப்படையில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டோம் என தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவமனையில் பல்வேறு பகுதிகளில் அடிப்படை கட்டமைப்புகளை செப்பனிட,பராமரிப்பு செய்ய வேண்டி உள்ளதால் அதற்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேட்டி அளித்தார்.