தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவச் செல்வங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறையாதாதால் பள்ளிகள் திறப்பு தேதி 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய தொடங்கியதாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்ததாலும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது.
இதையடுத்து 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ம் தேதியும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என கடந்த வாரம் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. கோடை விடுமுறையில் சொந்த ஊர், உறவினர்கள் வீடு, விளையாட்டு என சந்தோஷமாக சுற்றித் திரிந்த மாணவர்கள் கொஞ்சம் வருத்தத்துடனும், அதிகம் மகிழ்ச்சியுடன் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர்.
முதல் நாள் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் செய்து கொடுத்துள்ளன. இதேபோல் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆனதால் அதனை ஈடு செய்ய சனிக்கிழமைகளில்வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்ற பள்ளி
இதற்கிடையே ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகில் உள்ள அரசு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவிகளை சிவப்பு கம்பளங்கள் விரித்து பூக்களை கொடுத்து ஆசிரியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இதற்கிடையே கோடை விடுமுறை முடிந்து இன்று முதல்நாள் பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்களுக்கு என் வாழ்த்துகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் “நன்கு படியுங்கள், படிப்போடு நில்லாமல் விளையாடுங்கள், உலகைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் சிறகைப் பொருத்திக் கொண்டு வாழ்வில் வெற்றி பெற அரசு துணை நிற்கும்! நான் உறுதுணையாக இருப்பேன்.” என்று உறுதி மொழி அளித்துள்ளார்.
திருப்பூரில் மேள தாளத்துடன் வரவேற்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த காரத்தொழுவு அரசு உயர்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களை பள்ளியின் முகப்பில் திருவிழா போல வாழைமரம் கட்டி, நாதஸ்வர, மேள இசை முழங்க ரோஜாப்பூ வழங்கி பள்ளியின் ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் வரவேற்றனர். மேலும் புதிய மாணவர்களை சீனியர் மாணவர்கள் இருபுறமும் வரிசையில் நின்று கைதட்டி உற்சாகப்படுத்தி வரவேற்றனர்.