உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் காலமானார். அவருக்கு வயது 82. கடந்த 3 ஆண்டுகளாக உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் குருகிராம் பகுதியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
10 முறை எம்எல்ஏவாகவும் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். 1989 முதல் 1991 வரையிலும், 1993 முதல் 1995 வரையிலும், 2003 முதல் 2007ம்ஆண்டு வரையிலும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சராக பதவி வகித்தவர் முலாயம் சிங் யாதவ். முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்து வந்தவர். 1992ம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்தில் தொடங்கியு சமாஜ்வாதி கட்சி பிரதான கட்சிகளில் ஒன்றாக வளர்ந்துள்ளது. முலயா சிங் யாதவ்வின் மகன் அகிலேஷ் யாதவும் உத்தர பிரதேச மாநில முதல்வராக பதவி வகித்தவர். 30 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய அரசியலிலும் முலாயம் சிங் யாதவ் முக்கியத்துவம் பெற்றிருந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேதாஜி என்று உ.பி. மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட முலாயம் சிங் யாதவ் நெருக்கடி காலங்களில் 19 மாதங்கள் சிறையில் இருந்தார். அவரது 2வது மனைவி சாதனா குப்தா கடந்த ஜூலை மாதம் காலமானார்.