காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்ட ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், அது தொடர்பான ஆய்வை கைவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளன.
இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. பொது சிவில் சட்டத்தின் அவசியம் குறித்து பிரதமர் மோடி பேசியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. மேலும் இந்த சட்டத்திற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
இந் நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பான சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, உள்பட நாட்டின் பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்போது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பொது சிவில் சட்டம் தேவையில்லை என 21-வது சட்ட கமிஷன் கூறிய நிலையில், மத்திய அரசு அதை கொண்டு வருவதற்கான நோக்கம் என்ன எனவும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த சட்டம் மாநில உரிமைகளை பறிக்கும் என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.