பழனி வனப்பகுதியில் வாழும் பறவைகளை பிடித்து வைத்திருந்த, தம்பதிக்கு வனத்துறையினர் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலை அருகே ஏராளமான வனவிலங்குகளும், பறவைகளும் வசித்து வருகின்றன. அவற்றுள், அரிய வகை பறவையான பச்சை கிளிகள் மற்றும் முனியாஸ் பறவைகளை சிலர் வேட்டையாடி வருவதாக வனத்துறையினருக்கு புகார் வந்தது.
இந்நிலையில், வனத்துறையினரால், மாரிமுத்து என்பவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டபோது, 40 கிளிகள் மற்றும் 70 முனியாஸ் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, அவைகள் கூண்டுகளுடன் சேர்த்து பறிமுதல் செய்யப்பட்டன.
இதனை தொடர்ந்து, வனத்துறையினர், மாரிமுத்து மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகியோருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அப்பகுதி மக்கள், அவர்கள் வீட்டில் வளர்க்கும் கிளிகளை தங்கள் அலுவலகத்தில் வந்து ஒப்படைத்து செல்லவேண்டும் என்று எச்சரித்து சென்றனர்.