சாலை விதிகளை மீறிய புகார்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் மூலம் ரூபாய் 7 கோடிக்கு மேல் சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வசூலித்துள்ளனர்.
சாலை போக்குவரத்து விபத்துக்களில் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு விகிதத்தை குறைக்க சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் கடுமையான முயற்சிகளை எடுத்து வருகின்றனர். சென்னையில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 6000க்கும் மேற்பட்ட வழக்குகள் தினசரி பதிவு செய்யப்படுகின்றன.
இருப்பினும் விதிமீறல் செய்துவிட்டு, அபராதத் தொகையை செலுத்தாதவர்களை தொலைபேசியில் அழைப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த விழிப்புணர்வு மூலம் உரிய பதில் கிடைக்காததால் ஜூன் 6, 8 மற்றும் 10 ஆம் தேதிகளில் 156 இடங்களில் திடீர் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய 93 வழக்குகள் உட்பட 8,613 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 38 லட்சத்து 31 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
கடந்த 5 மாதங்களில் நிலுவையில் இருந்து சுமார் 1 லட்சத்து 90 ஆயிரத்து 246 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு சுமார் ரூ.7 கோடியே 96 லட்சத்து 97 ஆயிரத்து 130 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.