தென்கொரியாவில் நடைபெற்ற “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் -2023” போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சார்ந்த தடகள வீரர்கள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தென்கொரியாவில் 2023 ஜுன் 4 முதல் 7 வரை 20 வயதுக்கு உட்பட்டோருக்கான “ஆசிய தடகள சாம்பியன்ஷிப் – 2023” போட்டிகள் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் இந்திய தடகள வீரர்கள் 19 பதக்கங்கள் வென்றனர்.
இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தமிழ்நாட்டை சார்ந்த 4 தடகள வீரர்கள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர். 4 × 400 மீ தொடர் ஓட்டத்தில் எம்.கனிஸ்டா டீனா (பெண்கள் பிரிவு) தங்கப்பதக்கமும், எம். சரண் மேகவர்ணம் (ஆண்கள் பிரிவு) வெள்ளிப் பதக்கமும், 4×100மீ தொடர் ஓட்டத்தில் (பெண்கள் பிரிவு) ஆர். அபிநயா மற்றும் எஸ். அக்சயா ஆகியோர் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த 4 தடகள வீரர்களும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை (10.06.2023) சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.