கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு சாலையின் குறுக்கே ரயில்வே கிராசிங்கில் கட்டப்பட உள்ள புதிய பாலம் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் அமைக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தெரிவித்துள்ளார்.
மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் விரிகோடு என்னும் இடத்தில் ரயில்வே கிராசிங் அமைந்துள்ளது. இங்கு பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் பாதிக்கப்படுவதால் புதிதாக மேம்பாலம் கட்டித்தரக்கோரி பொது மக்கள் நெடுஞ்சாலை துறையிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற அரசு அனுமதி அளித்து அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தது. கட்டுமானப் பணிகளுக்காக தேர்வு செய்யப்படும் இடங்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று இடம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்திடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஜய்வசந்த் எம்.பி. புதிய இடத்தினை தேர்வு செய்ய ஆய்வு செய்த நிலையில், உண்ணாமலைக்கடை பேரூராட்சி அலுவலகத்தில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அமைய உள்ள புதிய பாலம் மக்கள் விரும்பும் இடத்திலேயே எந்த பாதிப்பும் இல்லாமல் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதேபோல் குமரி மாவட்டம் கோவளம் கடற்கரை கிராம மக்கள் சார்பில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த கோரிக்கையை ஏற்ற விஜய்வசந்த், தனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி, அதற்கான பூமிபூஜையை தொடங்கிவைத்தார். இதில் வட்டார தலைவர் சுரேஷ் மாநில செயலாளர் ஸ்ரீநிவாசன் மற்றும் ஆரோக்யராஜ் கலந்து கொண்டனர்.