திரைப்பட பாணியில் இளைஞர் ஒருவரை இரட்டை சகோதரிகள் காதலித்த நிலையில் 3 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திருவாலங்காடு ஒன்றியத்தில் நடைபெற்றுள்ளது.
திருவாலங்காடு ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோதண்டராமனுக்கு இரட்டை பெண் குழந்தைகள் உள்ளனர். 10ம் வகுப்பு படித்து வந்த இரட்டை சகோதரிகள் இருவரும், எதிர் வீட்டை சேர்ந்த உறவுக்கார இளைஞரை காதலித்ததாக கூறப்படுகிறது.
ஐடிஐ படித்த இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரம் குடும்பத்தாருக்கு தெரிந்த நிலையில் இருதரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் மனமுடைந்த 3 பேரும் கொசஸ்தலையாறு அருகே சென்று கொக்கு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
3 பேரும் மயங்கி விழுந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி வழியாக சென்ற மக்கள், அவர்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மீதி 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.