சென்னை வேளச்சேரியில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய காவல் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, வேளச்சேரி காவல் நிலைய போலீசார் வேளச்சேரி, மருது பாண்டியர் சாலை, ஏரிக்கரை அருகே கண்காணித்தபோது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 நபர்களை விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகத்தின் பேரில், அவர்களை சோதனை செய்தபோது, கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்த முனிஸ்வரன், ராஜ்குமார், பாலாஜி, ஆகிய 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.3 கிலோ கஞ்சா, 80 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 3 செல்போன்கள், ரொக்கம் ரூ.1,650/-, 2 ஊசிகள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.