தாட்கோ மூலம் மேக்கப் மற்றும் ஹேர் டிரஸ்ஸிங் பயிற்சி:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு தொழில்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தாட்கோ மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து Master Certification in Bridal Makeup Artistry மற்றும் Diploma in Creative Hair Dressing & Chemical Treatment பயிற்சிகளை வழங்க உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாகவும், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். இந்த பயிற்சி திருச்சி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்கும் தகுதியான நபர்களுக்கான தங்குமிடம் மற்றும் இதர செலவுகள் அனைத்தையும் தாட்கோ ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் நபர்களுக்கு, பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்பாடு செய்யப்படும். ஆரம்ப கட்ட மாத சம்பளமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை பெறும் வாய்ப்பும் வழங்கப்படும்.
இந்த பயிற்சியில் சேர விரும்பும் தகுதியான இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
