கோயில் நிலத்தில் சாகுபடிக்கு தடை: திருப்போரூர் விவசாயிகள் வேதனை

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமானதாக அறிவிக்கப்பட்ட விவசாய நிலங்களில் சாகுபடி செய்யக்கூடாது என கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருப்பது விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்போரூர் சுற்றுவட்டாரமான தண்டலம், ஆலத்தூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல தலைமுறைகளாக அந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலங்கள் தவறாக கோயில் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி, பட்டாவை விவசாயிகள் பெயரில் மாற்ற கோரி பல போராட்டங்களும் நடைபெற்றன.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சுமார் 230 ஏக்கர் நிலங்கள் கோயில் நிர்வாகத்தால் மீட்கப்பட்டு, அந்த இடங்களில் கோயில் சொத்து என அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டன.
ஆனால் தற்போது மழைக்கால சாகுபடிக்காக விவசாயிகள் ஏர் ஓட்டி உழவு பணிகளை தொடங்கியுள்ளனர். இதையடுத்து கோயில் நிர்வாகம், அனுமதியின்றி விவசாயம் செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த நிலங்களில் விவசாயம் செய்து வருகிறோம். இந்த விவசாயம்தான் எங்களின் குடும்ப வாழ்வாதாரம். நீதிமன்றத்தில் தீர்ப்பு வரும் வரை குறைந்தபட்சம் விவசாயம் செய்ய அனுமதி வழங்க வேண்டும்” என தெரிவித்தனர்.
