ஒடிசாவில் இருந்து 18 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்த இளைஞரை தாம்பரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை அடுத்த தாம்பரத்திற்கு ரெயில் மூலம் கஞ்சா வரப்படுவதாக மதுவிலக்கு காவல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தாம்பரம் ரெயில் நிலையத்திற்கு சென்ற மதுவிலக்கு அதிகாரிகள், ரெயிலில் வந்திறங்கிய பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ரிஸ்வான் என்பவர் வைத்திருந்த பையில் 18 கிலோ 300 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து தாம்பரம் பகுதியில் விற்பனை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமது ரிஸ்வானை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 18 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.