தமிழ்நாட்டில் வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டண உயர்வும் இருக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வேளாண் இணைப்புகள், குடிசை இணைப்புகள், வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று தெரிவித்துள்ள மின்சார வாரியம், கைத்தறி, விசைத்தறிகள் போன்றவைகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரச் சலுகைகளும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்றும் தனது அறிக்கையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.