அரியலூர் மாவட்டத்தில் சாலையோரம் 20 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் தத்தனூர் பொட்டக்கொல்லை பகுதியில் நேற்று முன்தினம் 20 வயது இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த உடையார்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இறந்த பெண் பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்த அபிநயா என்பது தெரியவந்தது. மேலும் மளிகைக் கடையில் வேலை பார்த்து வந்த அபிநயா, தஞ்சை மாவட்டம் பந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 30ம் தேதி இரவு பார்த்திபன், அபிநயாவுடன் இருசக்கர வாகனத்தில் உடையார்பாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது சாலையின் தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்துள்ளனர்.
இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், அபிநயாவை அங்கேயே விட்டு விட்டு பார்த்திபன் மட்டும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
படுகாயமடைந்த அபிநயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காதலியை காப்பாற்றாமல் விட்டுச் சென்ற பார்த்திபனை போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.