திருப்போரூர் அருகே இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில் அந்த காப்பகம் உரிய அனுமதியின்றி இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.
செங்கல்பட்டுதிருப்போரூர் ஒன்றிய பனங்காட்டுப்பாக்கம் அடுத்த புங்கேரி கிராமத்தில் அன்பகம் என்ற பெயரில் தனியார் காப்பகத்தை வீரமணி என்பவர் கடந்த 1999ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார். இங்கு மன வளர்ச்சி குன்றியோர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 55 பேர் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த காப்பகத்தில் வசிக்கும் பெண் ஒருவர் காப்பக நிர்வாகி வீரமணி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூகவலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து தாம்பரம் கோட்டாட்சியர் செல்வகுமார் விசாரணை நடத்தியதில் அந்த புகார் உண்மை என்பதால், செங்கல்பட்டு மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் நேற்று இரவு 12 மணி அளவில் வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் ஆசிரமத்திற்கு சென்று அங்கிருந்தவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் வீரமணி மன வளர்ச்சி குன்றிய பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் காப்பக நிர்வாகி வீரமணியை போலீசார் கைது செய்தனர்.