செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதால் விலை வாசி உயர வாய்ப்பு இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் வெளியூர் செல்லும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் உள்பட லட்சக்கணக்கான வாகனங்கள் பயன்பெறுவதற்காக விரைவுச்சாலைகளை அமைக்கப்பட்டு அவை பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த சாலைகளை பராமரிப்பதற்காக வாகன ஓட்டிகளிடம் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக உயர்த்தப்படும் சுங்கச்சாவடி கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை தேசிய நெடுஞ்சாலைகளில் 28 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடி கட்டணங்கள் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் 15 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, விக்கிரவாண்டி-திண்டிவனம்-உளுந்தூர்பேட்டை, கொடை ரோடு-திண்டுக்கல்-புறவழிச்சாலை-சமயநல்லூர், மனவாசி- திருச்சி- கரூர், மேட்டுப்பட்டி-சேலம்-உளுந்தூர்பேட்டை, மொரட்டாண்டி-புதுச்சேரி-திண்டிவனம், நத்தக்கரை-சேலம்-உளுந்தூர்பேட்டை, ஓமலூர்-நாமக்கல், தர்மபுரி-கிருஷ்ணகிரி-தும்பிப்பாடி, பொன்னம்பலப்பட்டி-திருச்சி-திண்டுக்கல், புதூர்பாண்டியபுரம்-மதுரை-தூத்துக்குடி, சமயபுரம்-பாடலூர்-திருச்சி, செங்குறிச்சி-உளுந்தூர்பேட்டை-பாடலூர் உள்பட 28 சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தபட்டுள்ளது.
தபால், கூரியர் சேவை, சரக்கு, காய்கறி, எரிபொருள் என அனைத்துமே தமிழகம் முழுவதும் சாலை வழியே கொண்டு செல்லப்படுவதால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயரக்கூடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.